சிவகங்கை தாலுகா அலுவலக ரோட்டில் சரக்கு வாகனங்களை நிறுத்த அனுமதி மறுப்பு
சிவகங்கை: சிவகங்கை தாலுகா அலுவலக ரோட்டில் சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்களை நிறுத்தவும், ரோட்டில் வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்யவும் நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்து அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தினர்.சிவகங்கையில் ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வாரச்சந்தை கட்டப்பட்டுள்ளது. சந்தையில் 172 காய்கறிகடைகள், 12 மீன் கடைகள், 1 காவலர் அறை, ஆண், பெண் கழிப்பறை, பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு கட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சந்தை கட்டடம் செப்.18 முதல் பயன்பாட்டிற்கு வந்தது.சந்தையில் வியாபாரிகள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து விற்காமல் சந்தையின் நடைபாதையில் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காய்கறி மூடைகளை வைத்துக்கொள்கின்றனர். சந்தைக்குள் நடைபாதையில் நடந்து செல்வதில் பொதுமக்கள் சிரமபடுவதாக புகார் எழுந்தது.அதேபோல் ஒருசிலர் தாலுகா அலுவலக ரோட்டில் வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. நேற்று நகராட்சி மேலாளர் கென்னடி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் தாலுகா அலுவலக ரோட்டில் சரக்கு வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.மேலாளர் கென்னடி கூறுகையில், தாலுகா அலுவலக ரோட்டில் வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதி கிடையாது. வியாபாரிகள் சந்தைக்குள் மட்டுமே கடை அமைத்து விற்பனை செய்ய வேண்டும். அதேபோல் சரக்கு வாகனங்களை தாலுகா அலுவலக ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விற்பனை செய்ய கூடாது.சரக்கு வாகனங்கள் அனைத்தும் செட்டி ஊரணி கரை கலெக்டர் அலுவலக ரோட்டின் ஓரத்தில் தான் நிறுத்த வேண்டும். தாலுகா அலுவலக ரோட்டில் கடை அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் காய்கறிகள் நகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்படும் என்றார்.