திருப்புவனத்தில் முக்கிய இடங்களில் தரையில் மின்ஒயர்களை பதிக்க கோரிக்கை
திருப்புவனம் : திருப்புவனத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் முக்கிய இடங்கள் உள்ள மின்ஒயர்களை தரையில் பதிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்புவனத்தில் 18 வார்டுகளில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதுதவிர திருமண மகால், அரசு , தனியார் அலுவலகங்கள், வங்கிகள் என ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. மதுரை நகருக்கு அருகாமையில் திருப்புவனம் இருப்பதால் நாளுக்கு நாள் இங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுப்புது குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன.திருப்புவனம் துணை மின் நிலையத்தில் இருந்து நகர்பகுதியில் 48 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. திருப்புவனம் மணி மந்திர விநாயகர் கோயில் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக இரும்பு மின் கம்பம் உள்ளது.நரிக்குடி விலக்கில் இருந்து திரும்பும் கனரக வாகனங்கள் அடிக்கடி இரும்பு மின்கம்பத்தில் சிக்கி விபத்திற்குள்ளாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை. இந்த இடத்தில் மின்கம்பிகளை தரைவழி இணைப்பாக மாற்றி இரும்பு மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.இதேபோல தேரோடும் வீதிகளின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளுக்கு பதிலாக தரைவழியாக இணைப்பு வழங்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் தேரோட்டத்தின் போது நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்கம்பிகள் அகற்றப்படுகின்றன, தேரோட்டம் முடிந்த உடன் மீண்டும் இணைப்பு வழங்கப்படுகின்றன.பூமிக்கடியில் மின்கம்பிகளை புதைத்து இணைப்பு வழங்கினால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம், வளர்ந்து வரும் நகரான திருப்புவனத்தில் இன்னும் பழைய முறைப்படி மின் இணைப்பு வழங்குவது, மின்சாரத்தை நிறுத்துவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் திருப்புவனத்தில் ஆய்வு மேற்கொண்டு பூமிக்கடியில் மின் கம்பிகளை புதைத்து இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.