கைவிடப்பட்ட அரசு அலுவலக கட்டடங்களை அகற்ற கோரிக்கை
திருப்புத்துார்: திருப்புத்துாரில் பயன்படாத பழைய அரசு அலுவலக கட்டடங்களை அகற்றி பொதுப்பயன்பாட்டிற்கு இடத்தை கொண்டு வர வேண்டும். திருப்புத்துார் - காரைக்குடி ரோட்டில் பழைய தாசில்தார் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகக் கட்டடம் சிதைந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகி விட் டது. இந்த கட்டடம் அகற்றப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதில் முட்செடிகள், புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள இந்த இடத்தை பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதற்கு இங்குள்ள பழைய கட்டடத்தை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி ரோட்டோரத்தில் கோயில் சுற்றுச்சுவர் அருகே நிற்கும் வேன் ஸ்டாண்டை தற்காலிகமாக இங்கு மாற்றலாம். அது போல, தாலுகா அலுவலக ரோட்டில் உள்ள பழைய கோர்ட் கட்டடம். புதிய கோர்ட் கட்டப்பட்டு 30 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், நுாற்றாண்டைக் கடந்த இந்த கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன்னரே இடிக்க அனுமதியாகியும் இடித்து அகற்றப்படாமல் பாழடைந்து உள்ளது. தாலுகா அலுவலக ஆதார் மையத்திற்கு அருகாமையில் மக்கள் காத்திருக்கும் கூடம் அருகில் பாதுகாப்பின்றி உள்ளது. இந்தக் கட்டடத்தையும் அகற்றி பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.