கொசுத்தொல்லையால் நோய் பரவும் அபாயம்
தேவகோட்டை: தேவகோட்டை நகரில் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து பராமரிக்கப்படுவதில்லை. இதனால் கால்வாயில் பாலிதீன் நிரம்பி, கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் ஆங்காங்கே ரோடுகளிலும் காலியாக உள்ள இடங்களிலும் மழை நீர் தேங்கி கொசுக்கள் அதிகரித்துள்ளது. மழை தண்ணீருக்கு டெங்கு கொசு உருவாகும் நிலையில் இது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. நகரில் கொசு மருந்து தெளித்து நீண்ட நாட்களாகி விட்டது. கால் வாயை துார் வாரும் பணியை துவக்க வேண்டும். நகராட்சி சுகாதாரத்துறை விரைந்து செயல்பட்டு கொசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.