தேவகோட்டையில் ஓராண்டில் ரோடு மஸ்ட்: ஆறு கிராம மக்கள் போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டை ஒன்றியத்தில் வெளிமுத்தி கிராமத்தில் இருந்து கண்ணங்குடி ஒன்றியம் இஸ்திரிக்கோட்டை வரை 2021 ம் ஆண்டு பிரதமர் கிராமச் சாலைத் திட்டத்தில் ரூ. 2 கோடியில் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோடு வழியாக வடுகணி, கடகாம்பட்டி, ஆலங்குடி புலிகுளம், செட்டியேந்தல், இஸ்திரிக்கோட்டை இணைப்பு சாலைகள் செல்கின்றன.குறுக்கு வழியாக கண்ணங்குடி ரோட்டில் உள்ள அனுமந்தக்குடிக்கும் செல்லலாம். 4 கி.மீ. துாரமுள்ள இந்த ரோடு 2021= - 22 ஆண்டு திட்டமாக இருந்தாலும் ஜவ்வாக இழுத்து ஒரு வழியாக 2023 ல் தான் நிறைவு பெற்றது, பிரதமர் கிராமச் சாலைத் திட்டத்தில் ரோடு பணி நடக்கும் போதே ரோடு அமைக்கும் முறைகள் ரோட்டின் லேயர் விபரம், உயரம், அகலம், பாலங்கள், எவ்வளவு பொருட்கள் பயன்படுத்தப்படும் என்பது குறித்து விளக்கமாக ரோடு முகப்பில் போர்டு வைத்தனர்.இந்த ரோட்டை ஐந்து ஆண்டு பராமரிப்பது மட்டுமின்றி சிறிய பாலங்கள், ரோடு, எப்போது பராமரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் ரோட்டோரம் வளரும் முட்செடிகளை வெட்டுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிபந்தனைகளை ரோடு அமைத்த கான்ட்ராக்டர் பின்பற்றவில்லை. இப்போது ரோட்டின் நிலைமை படுமோசமாக உள்ளது.ரோடும் பணி நடக்கும் போதே பல இடங்களில் தார் கலவை பெயர்ந்தது. அப்போதே அதிகாரிகளிடம் சுட்டி காட்டி மக்கள் கேட்டபோது மழுப்பலாக பதில் கூறி பெயர் அளவில் சரி செய்தனர். தற்போது ரோடு முழுவதும் கற்கள் பெயர்ந்தது மட்டுமின்றி பெரும் பள்ளமாகி விட்டது. ரோடு இரண்டாக பிளந்து ரோட்டின் நடுவிலேயே மரங்கள் முளைக்க தொடங்கி விட்டன. ரோட்டோரமும் முட்செடிகள் வளர்ந்து கார் செல்லும் பாதை டூவீலர் செல்லும் பாதையாக மாறி வருகிறது. ரோட்டின் குறுக்கே சிறு சிறு பாலங்கள் கட்டப்பட்டு ரோட்டை இணைக்காததால் அந்த இடத்தில் இறங்கி தான் செல்ல வேண்டும்.இந்த படுமோசமான ரோட்டால் ஆறு கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஒன்றியங்களை சேர்ந்த இந்த பகுதியில் ரோடு அமைக்கப்பட்டாலும் தேவகோட்டை ஒன்றிய நிதியில் தான் போடப்பட்டுள்ளது. இரண்டு ஒன்றிய அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. கிராமத்தினர் கூறுகையில், அதிகாரிகளிடம் போனில் , நேரில் கூறி விட்டோம் . வரவே இல்லை. மழை காலம் வந்துவிட்டால் இன்னும் ரோடு படுமோசமாகி விடும் என்றனர்.