ரோட்டோர ஆக்கிரமிப்பு பள்ளி நிர்வாகம் புகார்
திருப்புவனம்: திருப்புவனம் -- பூவந்தி சாலையை ஒட்டி ஏராளமான ஆக்கிரமிப்பு இருப்பதால் வாகனங்கள் சென்று வர முடியாமல் சிரமப்படுவதாக தனியார் பள்ளி நிர்வாகம் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்துள்ளது.மடப்புரம் கண்மாயை ஒட்டி திருப்புவனம் -- பூவந்தி சாலை அமைந்துள்ளது. சாலையின் இருபுறமும் பலரும் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டியுள்ளனர். மாநில நெடுஞ்சாலையாக இருந்த இச்சாலை சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டும் இன்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.இச்சாலையை ஒட்டி தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். பள்ளி வாகனங்கள் மாணவ, மாணவியர்களை பல்வேறு கிராமங்களில் இருந்து அழைத்து வருகின்றன. ரோட்டோரம் ஆககிரமித்து இருப்பதால் வாகனங்கள் திரும்ப முடியவில்லை.ஆக்கிரமிப்பு பகுதியில் வீடுகள் இருப்பதால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த வித வசதியும் செய்து தருவதில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி போக்குவரத்திற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.