அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை; மனஉளைச்சலுக்கு உள்ளாகும் செவிலியர்கள்
மாவட்ட அளவில் சிவகங்கை, காரைக்குடி,தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று அனைத்து கிராம பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார, துணை சுகாதாரநிலையங்கள் செயல்படுகின்றன. இம்மருத்துவமனைகளில் நாள்தோறும் சுமார் 300லிருந்து 700 வெளி நோயாளிகள், 100க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் இப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கர்ப்பிணிகளும், விபத்துக்களில் சிக்கி காயமடைபவர்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் பல மாதங்களாக அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், சுகாதார, துப்புரவு பணியாளர்கள் காலிபணியிடமாக உள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் உள்ள பணிகளை செவிலியர்கள் செய்வதோடு மட்டுமில்லாமல் நோயாளிகளை கவனிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரவில் டாக்டர்கள் பணியில் இல்லாத நிலையில் அவர்களது பணியையும் சேர்த்து செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்தியஅரசின் திட்டமான என்குவாஸ், காயகல்ப் போன்றவற்றின் நிதிகளை பெறுவதற்காக மருத்துவமனைகளில் பெரும்பாலான பணியிடங்கள் காலியாகவும், போதிய கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் செவிலியர்கள் மூலம் இப்பணிகளை செய்ய வற்புறுத்துகின்றனர். இதனால் பெரும்பாலான செவிலியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இது குறித்து செவிலியர்கள் கூறியதாவது:பெரும்பாலான மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. அப்பணிகளையும் சேர்த்து பார்ப்பதால் செவிலியர்கள் பணிச்சுமையில் தவிக்கிறோம்.அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு செவிலியர்களை பணிச்சுமைக்கு உள்ளாக்குகின்றனர். அடிக்கடி நடக்கும் ஆய்வுக்காக கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிஉள்ளது. இதனால் உரிய நேரத்தில் உணவு, ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் தவிக்கிறோம், என்றனர். இது குறித்து மருத்துவ துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் விரைவில் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட உள்ளது, என்றார்.