மருந்து பற்றாக்குறையால் தடுமாறும் சித்த மருத்துவமனை
திருப்புத்துார் : சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவமனைகளில் மருந்து,உபகரணம் பற்றாக்குறையால் மக்களுக்கு சிசிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்களிடம் சித்த மருத்துவமுறைக்கு வரவேற்பு இருந்தாலும் அதற்கான வாய்ப்பு அரசு மருத்துவமனை,சுகாதார நிலையங்களில் குறைவாக உள்ளது. சித்தா மருத்துவமனை செயல்படும் இடங்களில் மருந்து,பணியாளர், உபகரணங்கள் பற்றாக்குறையுடன் முழுமையாக செயல்படவில்லை. சிவகங்கை மாவட்ட அளவில் நிரந்தர மருத்துவமனைகளாக 25 இடங்களில் செயல்படுகிறது. இதற்கான மருத்துவராக மாவட்ட சித்த மருத்துவ அலுவலரே உள்ளார். அரசு மருத்துவமனைகளில் தனியாக சித்தா பிரிவு செயல்படுகின்றன. மேலும், பகுதி நேர மருத்துவமனைகள் 20 இடங்களில் உள்ளது. முன்பு ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் மருந்து சப்ளையானது. கடந்த ஓராண்டாக வழக்கத்தை விட 60 சதவீத மருந்திற்கும் குறைவாகத்தான் சப்ளையாகின்றன. இதனால் மாதத்தின் கடைசி 15 நாட்களில் மாத்திரை, தைலம், லேகியம் போன்ற மருந்து கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மருந்து வைத்து கொடுக்கும் காகித கவர் கூட சப்ளை இல்லாமல், பழைய பேப்பர்களில் வைத்து மக்களுக்கு கொடுக்கின்றனர். சித்த மருத்துவத்திற்கான உபகரணங்கள் மொத்தமாக வாங்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன. அவை தரமில்லாத உபகரணங்கள் என்பதால் விரைவாக பழுதடைந்து விட்டன. ஆனால் இயந்திரங்களை பழுது நீக்கவோ, மாற்றாக புது உபகரணங்கள் வழங்கப்படவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கஷாயம் போடுதல், நீராவிக் குளியல், வெந்நீர், ஒத்தடம், மசாஜ் போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போதிய அளவில் உள்ளனர். ஆனால் 20 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தெரபடிக் உதவியாளர் பணியிடம் முழுவதும் காலியாகவே உள்ளது. சுகாதாரப் பணிக்கு பணியாளரே கிடையாது. மேலும், இந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவபவர்களுக்கு பதவி உயர்வுக்கும் வாய்ப்பில்லை. பணியில் சேர்ந்த பதவியிலேயே ஓய்வு பெறுகின்றனர். மற்ற சுகாதாரப் பணிகளை போல சித்த மருத்துவமனைகளையும் கணினி மயமாக்க வேண்டியது அவசியமாகும். சில ஆண்டுகளாக அரசு நியமித்த யோகா பயிற்றுநர்கள் மூலம் பள்ளி, கல்லுாரி, நூறு நாள் வேலை பணியாளர், கிராமங்களில் சித்த மருத்துவம், யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சித்த மருத்துவமனைகளை கூடுதலாக மக்கள் பயன்படுத்த துவங்கினர். இந்நிலையில் இந்த பயிற்சியாளர்களும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளனர். யோகா பயிற்றுநர் பணியை மீண்டும் தொடரவும், மக்கள் வரவேற்பிற்கேற்ப சித்த மருத்துவ பிரிவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் துவக்கவும், மருத்துவமனைகளை கணினி மயமாக்கவும், புதிய உபகரணங்கள் விரைவாக வழங்கவும், மருந்துகளை போதுமான அளவில் விநியோகிக்க வேண்டியது அவசியாகும்.