தீர்ப்பாயம் உத்தரவை மதிக்காத சிவகங்கை நகராட்சி
சிவகங்கை; சிவகங்கையில் உள்ள குளங்கள், கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சிவகங்கை நகராட்சிக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் ஜூலை 1ல் உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பை மதித்து கழிவுநீர் கலப்பதை தடுக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தெப்பகுளத்திற்கு மழை நீர் செல்ல வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் கால்வாய்கள் அடைபட்டுள்ளன. தெப்பகுளத்தின் வடக்கு பகுதியில் உள்ள வரத்து கால்வாயில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, 2024 ஜன.1ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்பாயம், பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது. தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் அளித்த தீர்ப்பு, சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பது, நிலத்தடி நீரை பாதுகாப்பது, உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகியவற்றில், குளங்கள் போன்ற நீர்நிலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. குளங்களை பாதுகாப்பது அவசியம். நீர்நிலைகள் அழிவதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு கடைசியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது சுற்றுச் சூழலை பாதிப்பதோடு அரசுக்கு தேவையற்ற செலவையும் ஏற்படுத்துகிறது. வரும் முன் காப்பதே சிறந்தது என்ற பழமொழியை நினைவில் கொள்வது நல்லது. நீர்நிலைகளைப் பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை சிவகங்கை நகராட்சி மேற்கொள்ள வேண்டும். சிவகங்கை தெப்பகுளத்தின் நீர் தரத்தை தொடர்ந்து கண்காணித்து ஏதிர்காலத்தில் குளத்திலோ, அதற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களிலோ கழிவுநீர் விடப்படுவதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளையும் தடுக்க வேண்டும். நீர்வரத்து கால்வாய்கள், மழைநீர் வடிகால்களை அவ்வப்போது ஆய்வு செய்து, அடைப்பு, அனுமதி பெறாத கழிவுநீர் இணைப்பு இல்லாமல் இருப்பதை நகராட்சி உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஜூலை 1ல் வழங்கப்பட்டது.தீர்ப்பு வந்து 20 நாட்களை கடந்தும் இதுநாள் வரை தெப்பகுளம் வரத்துகால்வாயில் கழிவுநீர் கலப்பதை நிறுத்த முடியவில்லை. வரத்துகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. கால்வாய் துாரெடுப்பதற்கான எந்த பணியும் மேற்கொள்ள படவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் தெப்பகுளத்தை பாதுகாக்க தீர்ப்பாய உத்தரவை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.