| ADDED : செப் 21, 2011 11:07 PM
காரைக்குடி : நூலக நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவதால் மாவட்ட நூலகங்கள் அழிவு பாதையை நோக்கி செல்லும் பரிதாபம் உள்ளது.தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன. இதில், 30 சதவீதம் சொந்த கட்டடத்திலும்,70 சதவீத நூலகங்கள் வாடகை மற்றும் இலவச கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டு தோறும் நூலகங்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் போதிய இடவசதி இன்றி சாக்கு பையில் கட்டிப்போடும் நிலை உள்ளது. வசதி குறைவால் சில நூலகங்களில் வாசகர்கள் நின்று படிக்கும் அவலம் உள்ளது. மாவட்டந்தோறும் நூலக நிதியானது நிர்வாக செலவு போக 15 முதல் 20 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பில் உள்ளது. தமிழகம் முழுவதும் 800 கோடி ரூபாய்க்கு மேல் முறையாகப் பயன்படுத்தப்படாமல் நிரந்தர இருப்பில் உள்ள நிதி, எந்த மாவட்டத்திலும் நூலக வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு விழா நூலக கட்டடம் புதிதாக கட்ட திட்டமிட்டது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சுமார் 3 முதல் 5 கோடி ரூபாய் வரை நிதி பெற்று பொது நூலக இயக்குனர் மூலம் சுமார் 280 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டி முடித்து திறக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியை அந்தந்த மாவட்டத்தில் உள்ள நூலகங்களை பராமரிக்கவும், புதிய கட்டடங்கள் கட்டவும் மாவட்ட நூலக அலுவலர்கள் முறைப்படி பயன்படுத்த வேண்டும். அந்த நிதியை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. மேலும், பொதுமக்கள் மூலம் வசூலிக்கப்படும் உறுப்பினர் காப்புதொகை, சந்தா, புரவலர் தொகை போன்றவையும் நூலக நிதியில் ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பில் உள்ளது. இத்தொகையும் நூலக பயன்பாட்டிற்கு செலவிடப்படாமல் முறைகேடான முறையில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக இந்த நிதியில் நூலக சீரமைப்பு மாநாடு, நூலகத்திற்கு எழுது பொருட்கள், தளவாட பொருட்கள் வாங்குவது என்ற பெயரில் கையாடல் செய்யப்படுகிறது. இப்படி பல வகைகளில் நூலக நிதி மோசடி செய்யப்பட்டு வருவதால் அதன் வளர்ச்சி கேள்வி குறியாகவே உள்ளது. நூலகத்துறையை மேம்படுத்தும் வகையில் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்படும் நூலக நிதியை மாவட்ட நூலக அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி, அரசே நேரடியான கட்டுப்பாட்டில் கொண்டு வரும்பட்சத்தில் இதுபோன்ற நிதி முறைகேட்டை தடுக்க முடியும். மேலும், நூலக நிதியை அந்தந்த மாவட்டத்தில் உள்ள நூலகங்களை சீரமைக்கவும், புதிய கட்டடம் கட்டவும், முறையாக பணியாளர்கள் நியமனம் செய்யப்படுதல் போன்றவற்றிற்கு திட்ட ஒதுக்கீடு செய்து நிர்வாக தன்மை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இத்துறை சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.