விவசாய இணைப்பிற்கு ‛ஸ்மார்ட் மீட்டர் * தமிழக மின்வாரியம் திட்டம்
சிவகங்கை:தமிழகத்தில் விவசாய மின் இணைப்பில் மின் பயன்பாட்டு விபரத்தை துல்லியமாக கணக்கிட 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்கு இலவச மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. 23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. விவசாயத்திற்கு தினமும் 18, வீடுகளுக்கு 24 மணி நேரம் மின் விநியோகம் நடக்கிறது. பல கிராமங்களில் விவசாயத்திற்கு மின் விநியோகம் செய்யாத நேரங்களில் கூட மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அந்த வழித்தடங்களில் உள்ள வீடுகளில் குறைந்த மின்அழுத்த பிரச்னை ஏற்பட்டு மின் சாதனங்கள் பழுதாகின்றன.மத்திய அரசு மின்பயன்பாட்டு விபரம் அறிய மீட்டர் பொருத்தாமல் எந்தவித மின் இணைப்பும் வழங்க கூடாது என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் 2018 ல் இருந்தே விவசாய மின் இணைப்பில் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. மின்கட்டணம் இல்லாததால் விவசாய மின் மீட்டரில் பதிவாகும் மின்பயன்பாட்டை கணக்கிடுவது இல்லை. இதன் காரணமாக விவசாய மின் பயன்பாட்டையும் அறிய முடியாமல் மின்வாரியம் திணறி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண விவசாய மின் இணைப்புகளுக்கு 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் 1,200 இணைப்புகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. டெண்டருக்காக காத்திருப்பு
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: விவசாய மின் இணைப்புகளுக்கு 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த 2018 ஆண்டில் இருந்து அரசிடம் திட்டம் உள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் அவ்வப்போது நடக்கிறது. விரைந்து டெண்டர் விடப்பட்டு அனைத்து விவசாய மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.