உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகளின் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு: கிடப்பில் சுப்பன் கால்வாய் துார்வாரும் பணி

விவசாயிகளின் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு: கிடப்பில் சுப்பன் கால்வாய் துார்வாரும் பணி

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட விவசாயத்திற்கும்,இளையான்குடியில் சூராணம், முனைவென்றி, சாலைக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்றுமதி செய்யப்படும் குண்டு மிளகாய் மற்றும் பருத்தி விவசாயத்திற்கும் மானாமதுரை வைகை ஆற்றின் முக்கியத்துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பன் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.மானாமதுரை அருகே வைகை ஆற்றில் உபரியாக கலக்கும் நீரை உப்பாற்றில் கள்ளர்குளம் எனும் இடத்தில் சுப்பன் கால்வாய் திட்டத்தின் மூலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அணை கட்டப்பட்டு கால்வாயும் வெட்டப்பட்டது.மானாமதுரை, இளையான்குடி தாலுகாவில் இத்திட்டத்தின் மூலம் செய்களத்துார் பெரிய கண்மாய், செய்களத்துார் சின்னக் கண்மாய், மஞ்சிக்குளம் கண்மாய், கல்குறிச்சி கண்மாய், அரசகுழி கண்மாய், அரசனேந்தல் கண்மாய், வடக்குச் சந்தனுார் கண்மாய், என்.புக்குளி கண்மாய், எஸ்.காரைக்குடி கண்மாய், புத்தனேந்தல் கண்மாய்,அரியனுார் கண்மாய், மருதங்கநல்லுார் கண்மாய், மருதங்கநல்லுார் புதுக்கண்மாய்,தேவரேந்தல் கண்மாய், செட்டியேந்தல் கண்மாய், கோவானுார் கண்மாய், தச்சனேந்தல் கண்மாய்,காக்குடி கண்மாய், எழுநுாற்றி மங்கலம் கண்மாய், எல்.மணக்குடி கண்மாய், பிடாரனேந்தல் கண்மாய், அகரேந்தல் கண்மாய், திருவேங்கடம் கண்மாய், முள்ளுசேரி கண்மாய், கருவத்தி கண்மாய், நாகமுகுந்தன்குடி கண்மாய், திருவள்ளூர் பெரிய கண்மாய், விளாங்குளம் கண்மாய், கண்ணமங்கலம் கண்மாய், சாத்தனி உள்ளிட்ட கண்மாய்கள் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வந்த நிலையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்களிலேயே கால்வாய் தூர்ந்து மேடானதால் வைகை ஆற்றில் தண்ணீர் கூடுதலாக வரும்போது உபரி நீரை இக்கால்வாயில் திருப்ப முடியாமல் இத்திட்டத்தினால் பயனடைந்து வந்த கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் ராம முருகன் கூறுகையில், தேர்தல் காலங்களில் மட்டும் சுப்பன் கால்வாய் துார்வாரப்பட்டு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகளில் தெரிவிக்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் இத்திட்டத்தையும் மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால்பருவ மழை காலங்களில் தண்ணீர் வந்தாலும் வறண்டு கிடக்கும் மானாமதுரை, இளையான்குடி மற்றும் சாலைக்கிராமம் பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை உடனடியாக சீரமைத்து மானாமதுரை, இளையான்குடி பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ