பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்குஅக்.16, 17ல் பேச்சு போட்டிகள்
சிவகங்கை: சிவகங்கையில் அக்., 16 மற்றும் 17ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் காந்தி மற்றும் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும், தனியார், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும், அரசு, உதவி பெறும், தனியார் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் அக்.16 மற்றும் 17ல் பேச்சு போட்டிகள் நடைபெறும்.காலை 9:00 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், மதியம் 2:00 மணிக்கு கல்லுாரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும். மாவட்டத்திற்குள் இயங்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்கான தலைப்புகள் அந்தந்த முதன்மை கல்வி அலுவலர், கல்லுாரி கல்வி இணை இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளன. பேச்சு போட்டிகள் சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கல்வித்துறை அரங்கில் நடைபெறும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றும் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களில் சிறந்த இருவரை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பரிசு தொகை ரூ.2000 மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க பள்ளி தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன், போட்டி நாளான்று, தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குனரிடம் நேரடியாக வழங்கி பங்கேற்கலாம், என்றார்.