மேலும் செய்திகள்
உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
26-Sep-2024
மானாமதுரை : தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல் விளையாட்டு விழாவும்,கலை ஆசிரியர்கள் இல்லாமல் கலைத்திருவிழாவும் நடத்தப்பட்டு வருவதால் ஆசிரியர்கள்,மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.துவக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு வட்டார, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி, மற்றும் கலைத் திருவிழா போட்டி நடத்தப்பட்டு பதக்கம், ரொக்க பரிசு வழங்கப்பட்டு வருகின்றன.பல அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் கலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் விளையாட்டு மற்றும் கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளிக்க முடியாத சூழ்நிலையில் மாணவர்கள் விளையாட்டு மற்றும் கலை திருவிழா போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.இவர்களை போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக அப்பள்ளிகளில் உள்ள மற்ற ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் அந்த ஆசிரியர் எடுக்க வேண்டிய பாடங்களை எடுக்க முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழக அரசு மாணவர்களின் விளையாட்டு மற்றும் கலை திறமையை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. ஆனால் அதற்குரிய ஆசிரியர்கள் பெரும்பாலான பள்ளிகளில் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் இப் போட்டிகளில் உரிய பயிற்சி இல்லாமல் முழு திறமையுடன் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். மேலும் இவர்களை போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் பணிகளை மற்ற ஆசிரியர்கள் செய்வதால் மாணவர்களின் கல்வித் திறனும் பாதிக்கப்பட்டு வருகிறது ஆகவே தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனர்.
26-Sep-2024