சிவகங்கை நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் துாய்மை பணி, பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட நிர்வாகம் சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை நகராட்சியில் 2 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார். அவரும் விடுமுறையில் உள்ளார். அதேபோல் சுகாதார அலுவலர் மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனால் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.நகராட்சியில் துாய்மை சார்ந்த பணிகளை ஆய்வு மேற்கொள்வதில் தொய்வு ஏற்படுவதாக புகார் உள்ளது. அதே போல் வரி வசூல் செய்ய 5 வரி வசூல் செய்பவர் வேண்டும். இதில் 3 பேர் தான் பணியில் உள்ளனர். அதிலும் ஒருவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கத்தில் உள்ளார். மீதமுள்ள இரண்டு பணியிடங்கள் காலியாக உள்ளது.நகராட்சி மேலாளர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. அதேபோல் அலுவலக பணியாளர்களும் விடுப்பில் உள்ளனர். இதனால் நகராட்சியில் அனைத்து நிர்வாக பணிகளும் தேக்கம் அடைந்திருப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.