அங்கன்வாடி குழந்தைகளின் கால்களை பதம் பார்க்கும் கற்கள்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அங்கன்வாடி வளாகத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இவ்வொன்றியத்தில் பிரான்மலை ஊராட்சிக்குட்பட்ட கோபாலபச்சேரி அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. மாணவர்கள், குழந்தைகள் நடந்து செல்ல வசதியாக பேவர் பிளாக் பதிக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கரடு முரடான கற்களில் நடந்து செல்லும் போதும், விளையாடும்போதும் கால்களில் காயம் பட்டு அவதிப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து பள்ளி முன் மட்டும் பேவர் பிளாக் அமைக்கப்பட்டது. அங்கன்வாடி மையம் முன் பணி நடக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் குழந்தைகளும், பெற்றோர்களும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே உடனடியாக பேவர் பிளாக் தளம் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.