உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அடிப்படை வசதி முழுமையடையாமல் உள்ளதால் தவிப்பு

அடிப்படை வசதி முழுமையடையாமல் உள்ளதால் தவிப்பு

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் ஒன்றியம் தி.வைரவன்பட்டியில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.மேலும் குடிநீர் கிணற்று நீரை பராமரித்து விநியோகிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருக்கோஷ்டியூர் அருகே உள்ளது தி.வைரவன்பட்டி. திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் எதிரில் உள்ள இக்கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். சமுதாயக் கூடம், நாடகமேடை வசதி கூட இல்லாத கிராமமாக உள்ளது. இங்குள்ள மயானத்திற்கு செல்ல முழுமையான ரோடு வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.ரேஷன்கடை கட்ட பொது இடம் இருந்தும் வசதியில்லாத தனியார் ஓட்டு கட்டடத்தில் இயங்குகிறது. ரேஷன் பொருட்களை வைக்க சிரமம் ஏற்படுவதாகவும், மழை காலங்களில் ஒழுகுவதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு ஆபத்து

இங்குள்ள அங்கன்வாடி கட்டடத்தின் மேலே மின்வயர் செல்வதால் குழந்தைகள் மின்விபத்து அபாயத்திலிருப்பதாக பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். மின் வயர்களை வேறு வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதற்கு மதிப்பீடு செய்வதாக கூறப்பட்டு பல ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லை என்கின்றனர்.மழை பெய்தால் அங்கன்வாடி பகுதியில் மழை நீர் தேங்குகிறது. இதனைத் தவிர்க்க அப்பகுதியில் வடிகால் அமைத்து நீரை வெளியேற்ற கோரியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளதால் கிராமத்திற்குள் செல்லும் ரோட்டில் உள்ள பாலத்திற்கு இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாமல் விபத்து நடப்பதால் தடுப்புச் சுவர் அமைக்கவும் கோரியுள்ளனர்.

பராமரிப்பில்லாத கிணறு

இங்குள்ள மக்கள் குடிநீருக்கு முன்பு பயன்படுத்திய சேங்கை ஊரணி பராமரிப்பில்லாமல் தாமரைக் குளமாக மாறிவிட்டது. ஊரணியில் செடிகளை அகற்றி சுற்றுச்சுவர் கட்டவும், சேதமடைந்துள்ள படித்துறையை சீரமைக்கவும் வேண்டுகின்றனர்.ஊரணி கரையில் கடந்த 1969ல் குடிநீர் பொதுகிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளே ஆழ்குழாயும் போடப்பட்டுள்ளது. முன்னர் நீரை பம்ப் செய்து தொட்டியில் நிரப்பி விநியோகம் செய்தனர்.நல்ல குடிநீர் என்று கிராமத்தினரால் பயன்படுத்தப்பட்டது. கிராமத்தினர் விரும்பினாலும் தற்போது பயன்படுத்தாமல் உள்ளது. கிணறை தூர்வாரி பராமரித்து நடைமுறைப்படுத்தினால் குடிக்கவும், சமைக்கவும் நல்ல நீர் கிடைக்கும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மயானத்திற்கு ரோடு வசதி

தி.வைரவன்பட்டி முருகானந்தம் கூறுகையில், குடிநீர் உப்பு நீராக உள்ளது. இங்குள்ள பழைய கிணறு நீர் நன்றாக இருக்கும். தற்போது பாழடைந்து உள்ளது.சரி செய்து தொட்டி அமைத்து கொடுத்தால் நல்லது. மயானத்திற்கு ரோடு வேண்டும். நல்ல காரியங்கள் நடக்க சமுதாயக் கூடம், நாடக மேடை வேண்டும்.பால்வாடி அருகிலுள்ள இடத்தில் ரேஷன்கடை கட்ட வேண்டும்.' என்கிறார்.குக்கிராமமான இங்கு பல அடிப்படை வசதி முழுமையடையாமல் உள்ளதால் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி