நெடுஞ்சாலையில் சுரங்கப்பாலம் கிராமத்தினர் கோரிக்கை
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பயன்படுத்த சுரங்கப்பாலம் அமைக்க சுண்ணாம்பிருப்பு,பிராமணம்பட்டி கிராமத்தினர் கோரியுள்ளனர்.கிராமத்தினர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரியுள்ளதாவது:திருப்புத்துார் வழியாக மேலுார்- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதில் திருப்புத்துார் ஒன்றிய கிராமங்களான சுண்ணாம்பிருப்பு, பிராமணம்பட்டி வழியாக சாலை செல்கிறது. அதில் திருக்கோஷ்டியூர்- சுண்ணாம்பிருப்பு ரோட்டை கடக்க மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரோட்டின் இருபுறமும் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் பிராமணம்பட்டி, சுண்ணாம்பிருப்பு கிராமத்தினர் எளிதாக விவசாயப்பணிக்காக தற்போது நிலம் வழியாக கடந்து செல்ல முடியாது.உயரமாக உள்ள ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அது மிகவும் கடினமானது. கால்நடைகள் கடந்து செல்வதும் சிரமமானது. கருப்பர் கோயில், நாச்சியார் கோயில் வழிபாட்டிற்கு செல்வதும் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாய நிலப்பகுதியில் ரோட்டை கடந்து செல்ல சுரங்கப்பாலம் அமைத்து தர வேண்டும் என கிராமத்தினர் கோரியுள்ளனர்.