உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

சிவகங்கை: சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு 23 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் பேச்சுவார்த்தையின் பேரில் இந்த போராட்டம் கைவிடப்பட்டு விளக்கக் கூட்டமாக நடந்தது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காளையார்கோவில் வட்டார கல்விஅலுவலகத்தில் செப்.19 அன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.போராட்டத்தை அடுத்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் செப். 30 பேச்சுவார்த்தை நடந்தது.பேச்சுவார்த்தை நடந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் காத்திருப்புபோராட்டம் நடத்த ஆசிரியர் சங்கம் திட்டமிட்டது.இந்நிலையில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் மாவட்டக் கல்வி அலுவலர் தொடக்கக்கல்வி ஜோதிலட்சுமி நடத்திய பேச்சுவார்த்தையில் ஒருவார காலத்திற்குள் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டு நேற்று விளக்க கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, சிங்கராயர், குமரேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாவட்ட துணை நிர்வாகிகள் அமலசேவியர், பஞ்சு ராஜ், கல்வி மாவட்ட நிர்வாகி ஜான் கென்னடி பேசினர்.மாநில தலைவர் மணிமேகலை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டாலும், ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட தேதிக்குள் ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் போராட்டத்தை மீண்டும் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !