மாற்று அரசு பஸ்சும் பாலத்தில் நின்றது
மானாமதுரை : மானாமதுரையில் பழுதடைந்த அரசு டவுன் பஸ்சுக்கு பதிலாக இயக்கப்பட்ட மாற்று பஸ்சும் மேம்பாலத்தின் நடுவே பழுதாகி நின்றதால் மாணவர்கள்,பயணிகள் அவதிக்குள்ளாகினர். மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் ஓட்டை, உடைசலாக இயக்கப்படுகிறது. கிராமப் பகுதிகளுக்கு செல்லும்போது ஆங்காங்கே நடுவழியில் பழுதாகி நின்று விடுகிறது. இடைக்காட்டூரிலிருந்து மானாமதுரை வழியாக சிவகங்கை செல்லும் 34ம் நம்பர் கொண்ட அரசு டவுன் பஸ் நேற்று காலை 8:30 மணிக்கு மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சிவகங்கை சென்ற போது மானாமதுரை அண்ணாதுரை சிலை எதிரே வைகை ஆற்று மேம்பாலத்தின் நடுவே இன்ஜின் பழுது காரணமாக நின்றது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள்,அரசு ஊழியர்கள் மற்றும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பயணிகள் கூறியதாவது: ஆங்காங்கே நடுவழியில் அரசு பஸ்கள் பழுதாகி நின்று விடுகின்றன. புதிய பஸ்கள் வேண்டுமென நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பஸ் டிரைவர்,கண்டக்டர் கூறியதாவது,: ஓட்டை, உடைசல் பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் அல்லது நல்ல நிலையில் ஓடக்கூடிய பஸ்கள் வழங்க வேண்டும் என கேட்டு வருகிறோம். பழுதான பஸ்களை சரி செய்வதற்கு போதிய மெக்கானிக்குகளும், உதிரி பாகங்களும் இல்லாமல் தினமும் ஏராளமான பஸ்கள் பழுது ஏற்பட்டு ஆங்காங்கே நின்று விடுகிறது என்றனர்.