உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆடுகள் மேய்ச்சலுக்கு காவலனாக மாறிய நாய்

ஆடுகள் மேய்ச்சலுக்கு காவலனாக மாறிய நாய்

திருப்புவனம்; கிராமங்களில் கால்நடைகளான ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு என்றே கூலி தொழிலாளர்கள் இருப்பார்கள்,காலையில் பட்டியில் இருந்து மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலை வீடு திரும்புவார்கள். ஆனால் திருப்புவனம் அருகே எஸ்.நாங்கூர் கிராமத்தில் நாய் ஒன்று விவசாயிகளின் ஆடுகளை தினசரி காலை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.நாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூமிநாதன் 68, இவர் தனது வீட்டில் 16 ஆட்டு குட்டிகளை வளர்த்து வருகிறார். மேலும் மூன்று வயதான சீனு என்ற பெண் நாய்க்குட்டியையும் பிரியமாக வளர்த்து வருகிறார். தினசரி மேய்ச்சலுக்கு ஆட்டு குட்டிகளை அழைத்து செல்லும் போது நாய்குட்டியையும் அழைத்து செல்வார், ஆடுகள் வழிதவறும் போதும், வயல்களில் பயிர்களை மேயச் செல்லும் போதும் நாய்குட்டியை அனுப்பி ஒழுங்கு படுத்துவார், அதே போல ரோட்டோரம் மேய்ச்சலுக்கு விடும் போது ரோட்டிற்கு வரும் ஆட்டு குட்டிகளை சாலையோரம் அனுப்பவும் நாய்க்குட்டியை பயன்படுத்தியுள்ளார்.நாளடைவில் பூமிநாதன் வராத நிலையில் நாய்க்குட்டியே மேய்ச்சலுக்கு ஆட்டு குட்டிகளை அழைத்து சென்று மீண்டும் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறது. ஆட்டு குட்டிகளை வேறு வெளி நபர்கள் யாராவது திருட முயன்றால் விரட்டி விரட்டி கடித்து காயப்படுத்துகிறது. மேய்ச்சலில் ஆட்டு குட்டிகள் இருக்கும் போது காவலுக்கும் நின்று மேற்பார்வை இட்டு வருகிறது.கிராம மக்கள் கூறுகையில்: மிகவும் புத்திசாலியான நாய்குட்டி இது , காலை பத்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி விடும் அதனை பின் தொடர்ந்து ஆட்டு குட்டிகள் செல்லும், கண்மாயை ஒட்டியுள்ள பகுதிகளில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மதியம் மூன்று மணிக்கு சரியாக வீட்டிற்கு அழைத்து வந்து விடும், ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது காவலுக்கு நிற்கும், அதனை மீறி யாரும் ஆட்டு குட்டிகள் அருகில் செல்லவே முடியாது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ