இரவில் அலைபேசி வெளிச்சத்தில் கஞ்சா பொட்டலம் தேடிய கும்பல்
தேவகோட்டை : தேவகோட்டை பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட்டில் சிறு கடைகள் நடத்துவது போலவும், தியாகிகள் பூங்கா அருகே கடைகள் அருகே அமர்ந்து கஞ்சா விற்பனை சுலபமாக நடக்கிறது.இது போக நகரின் பல இடங்களிலும் விற்பனை ரகசியமாக நடக்கிறது. பஸ் ஸ்டாண்டில் நடக்கும் விற்பனையில் சிறுவயதினர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேவகோட்டை அருகே அனுமந்தக்குடி போர்குடி பகுதியில் சில இளைஞர்கள் நன்றாக போதையில் ரோட்டில் கிடந்துள்ளனர். அந்த பக்கம் சென்றவர்களை இளைஞர்கள் தாக்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராமத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அந்த போதை இளைஞர்களை விரட்டி அடித்துள்ளனர். தப்பியோடிய இளைஞர்கள் இரவு திரும்பி வந்து மொபைல் லைட் வெளிச்சத்தில் எதையோ தேடி உள்ளனர். இதனை கவனித்த கிராமத்தினர் அங்கு வரவே இளைஞர்கள் ஓடி விட்டனர்.மொபைல் லைட்டில் என்ன தேடினார்கள் என்று கிராமத்தினர் பார்த்த போது 20 க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கிடந்து உள்ளன. போதையில் இருந்த இளைஞர்கள் கஞ்சா அடித்திருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து கஞ்சா இளைஞர்களை தேடி வருகின்றனர்.