உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் பெண்கள் பள்ளி முன் வேகத்தடுப்பு எச்சரிக்கை பலகை நெடுஞ்சாலைத்துறை உறுதி

திருப்புவனம் பெண்கள் பள்ளி முன் வேகத்தடுப்பு எச்சரிக்கை பலகை நெடுஞ்சாலைத்துறை உறுதி

திருப்புவனம்: திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளி முன் வேகத்தடை அமைக்க வாய்ப்பில்லை என நெடுஞ்சாலைத்துறை கை விரித்துள்ளது. திருப்புவனத்தில் சிவகங்கை ரோட்டில் அரசு பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இரண்டாயிரம் மாணவிகள் கல்வி பயில்கின்றனர். திருப்புவனத்தில் இருந்து பூவந்தி, மேலூர்,சிவகங்கை, மடப்புரம் செல்லும் பிரதான சாலையில் பள்ளி அமைந்துள்ளது. இப்பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.சிவகங்கையில் இருந்து கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாகத்தான் சென்று வருகின்றன.மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் இருப்பதாலும் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் வாகனங்களில் இப்பாதையை கடந்து செல்வதாலும் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் மாணவிகள் பாதையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டும் என திருப்புவனத்தைச் சேர்ந்த முத்துராஜா நெடுஞ்சாலைத்துறையிடம் மனு கொடுத்திருந்தார், இதற்கு பதிலளித்த மதுரை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மதுரை- -தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி அமைந்துள்ளது.பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடை அமைக்க முடியாது. அந்த விதியின் கீழ் திருப்புவனம் அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்க வாய்ப்பில்லை. அதற்கு பதில் பள்ளி முன் வாகனங்களுக்கான எச்சரிக்கை பலகை, கோடுகள் உள்ளிட்டவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ