பூர்வீக வைகை பாசன பகுதிக்கு நவ.13 வரை 1824 கன அடி நீர் 1.36 லட்சம் ஏக்கர் பயனடையும்
சிவகங்கை: திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ சாகுபடிக்கு நேற்று முதல் நவ., 13 வரை வைகை அணையில் இருந்து ஒட்டு மொத்தமாக 1824 கன அடி தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அரசு செயலர் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். நேற்று முதல் அக்., 31 வரை 5 நாட்களுக்கு பூர்வீக வைகை பாசன பகுதி 3க்கு 624 மி. கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்த்தி பனுார் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 207 கண்மாய்களில் நீர் சேகரமாகி, 54,472 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி முதல் சாலைக்கிராமம் வரை உள்ள 34 கண்மாய்களுக்கு நீர் சேகர மாகி, 13,335 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். நவ.,2 முதல் 6 வரை வைகை பூர்வீக பாசன பகுதி 2க்கு 5 நாட்களுக்கு 772 மி.கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் விரகனுார் மதகு அணையில் இருந்து பார்த்திபனுார் மதகு அணை வரையிலான பகுதிகளில் உள்ள 87 கண்மாய்களுக்கு நீர் சேகரமாவதன் மூலம் 40,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நவ.,8 முதல் 13ம் தேதி வரை 6 நாட்களுக்கு வைகை பூர்வீக பாசன பகுதி 1க்கு 428 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நீர் மூலம் விரகனுார் தெற்கு கால்வாய் மூலம் செல்லும் தண்ணீர் திருமங்கலம் பகுதிக்கும், வடக்கு பகுதி யில் இருந்து செல்லும் தண்ணீர் சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 46 கண்மாய்களில் நீர் சேகரமாகி, 27,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இது தவிர மார்ச் 2026 வரை வைகை அணையில் வைகை பங்கீட்டு நீர் 1354 கன அடி எட்டும் போதெல்லாம் வைகை பூர்வீக பாசன பகுதி 1 மற்றும் 3 பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு விதிகளின் படி 2:3:7 என்ற விகிதாச்சார அடிப்படையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவ சாகுபடிக்கு முன்வருவர் பூர்வீக வைகை பாசன விவசாயிகள் சங்க பொது செயலாளர் எல்.ஆதிமூலம் கூறியதாவது: வைகை அணையில் சம்பா பருவ சாகுபடிக்கு தண்ணீர்திறக்கு மாறு அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அதன்படி நேற்று முதல் நவ., 13 வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணை நீர் கண்மாய்களில் பதிவு அளவில் தேங்கினாலே விவசாயிகள் நம்பிக்கை யுடன் சம்பா பருவ சாகுபடிகளை தைரியமாக துவக்க முன்வருவார்கள் என்றார்.