மேலும் செய்திகள்
விரிவாக்கம் செய்யப்படாத பாலங்கள்; விபத்து அபாயம்
12-Aug-2025
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் தாலுகாவில் பாசன பற்றாக்குறையை சமாளிக்க 1980-களில் பெரியாறு பாசன கால்வாய்கள் விஸ்தரிக்கப்பட்டன. அப்போது வறட்சிக்கு இலக்கான பகுதியில் திருப்புத்துார் சேர்க்கப்படாததால் திருப்புத்துார் ஒன்றிய கண்மாய்கள் புறக்கணிக்கப்பட்டன. வறட்சிக்குப் பின்னர், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து 1994ல் ரூ.22 கோடி மதிப்பில் பெரியாறு பாசன 7 வது கால்வாயிலிருந்து விஸ்தரிப்பு கால்வாய் கட்டப்பட்டது. கருப்பூர்,கோட்டையிருப்பு,ரணசிங்கபுரம் வழியாக திருப்புத்துார் பெரியகண்மாய் வரை கால்வாய் கட்டப்பட்டது. பல கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் வரை பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கால்வாய் கட்டி சில முறை மட்டுமே நீர் வரத்து காணப்பட்டது. பின்னர் நீர் வரத்தின்றி கால்வாய் சிதிலமடைந்து தற்போது கால்வாய் இருந்த தடமே இல்லாம் மண் தரையாக உள்ளது. பெரியாறு பாசனத்திட்டத்தின் கீழ் கால்வாயை புனரமைத்து, நீர் வரத்துக்கு நடவடிக்கை எடுக்க கோருகையில், இக்கால்வாய்கள் பெரியாறு பாசனத்திட்டத்திலேயே இல்லை. அந்த ஆயக்கட்டு பகுதி பெரியாறு பாசனத்தில் சேர்க்கப்படவில்லை என்பதும், அதனால் பெரியாறு திட்ட பொ.ப.து.யினர் கால்வாயை பராமரிக்காமல் விட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், மணிமுத்தாறு வடிநிலப்பகுதியில் நீட்டிப்புக் கால்வாயாக கட்டப்பட்டது. வெள்ள காலங்களில் 6,7 வது கால்வாய்கள் மூலம் உபரி நீர் செல்ல அக்கால்வாய் பயன்படுத்தும் நோக்கில் கட்டப்பட்டுள்ளது. கால்வாய் முற்றிலுமாக சேதமடைந்து விட்டதால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. பெரியாறு பாசன கோட்ட அலுவலகத்தினர் கூறுகையில், 'சிங்கம்புணரி கால்வாய்களுக்கு தண்ணீர் செல்ல கடந்த 3 ஆண்டுகளில் அரசாணை பிறப்பிக்காத நிலை உள்ளது. இதனால் மறுகால் சென்ற கருங்காலக்குடி கண்மாயின் உபரிநீரே சிங்கம்புணரி கால்வாய்களுக்கு திருப்பி விடப்பட்டது. பெரியாறு அணையில் 152 அடிக்கு நீர் தேக்கப்பட்டால் தான் திருப்புத்துார் பகுதி பெரியாறு அணை நீர்வரத்திற்கான ஆயக்கட்டில் சேர்க்க வாய்ப்பு உருவாகும். சிங்கம்புணரி கால்வாய்களுக்கு பராமரிப்பிற்கு ரூ. 8 கோடி மதிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக திட்ட மதிப்பீடு அனுப்பியும் நிதி அனுமதியாகவில்லை.' என்றனர். திருப்புத்துாரில் மழை நீர் பற்றாக்குறை,ஆறுகளில் நீர்வரத்து இல்லாதது, நிலத்தடிநீர் பற்றாக்குறை என்பதால் நெல்சாகுபடி, தோட்டப் பயிர்கள் சாகுபடி சரிந்து வருகிறது. அதைத் தவிர்க்க புதிய பாசனத் திட்டம் அவசியம். பெரியாறு பாசனத் திட்டத்தை புனரமைக்க தற்போது வாய்ப்பில்லை என்பதால் புதிய பாசனத் திட்டத்தை உருவாக்க பொ.ப.து. மற்றும் வளர்ச்சித்துறையினர் திட்டமிட வேண்டியது அவசியமாகும். காளாப்பூர் அணைக்கட்டிலிருந்து திருப்புத்துார் பெரியகண்மாய்க்கு புதிய நீட்டிப்பு கால்வாய் அமைப்பது. கிடப்பிலுள்ள காவிரி- வைகை- குண்டாறு இணைப்பில் கிளை கால்வாய் மூலம் திருப்புத்துார் விருசுழியாற்றை இணைப்பதற்கான ஆய்வு, ஒன்றியத்திலுள்ள கண்மாய்கள் பகுதியில் பெய்யும் மழை நீர் கண்மாயில் முழுமையாக சேகரமாக வசதியாக வரத்துக்கால்வாய்களை நவீனப்படுத்துவது. சிறு,சிறு கண்மாய்களை முழுமையாக தூர்வாரி, மடை,கலுங்குகளை சீரமைப்பது என்று பொ.ப.து. மற்றும் வளர்ச்சித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
12-Aug-2025