துவங்கியது கோடை வெயில் திருப்புத்துாரில் குடிநீர் தட்டுப்பாடு
திருப்புத்துார்: திருப்புத்துாருக்கு காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தற்போது குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. திருச்சி அருகே காவிரிப்படுகையான முத்தரசநல்லுாரிலிருந்து ஆழ்குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு திருப்புத்துாருக்கு வருகிறது. இரு நாட்களுக்கு ஒரு முறை 10முதல் 12 லட்சம் லிட்டர்வரை இத்திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்கிறது. தற்போது கோடை துவங்கியுள்ளதால் நீர்வரத்துக்குறையும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. திருப்புத்துாரில் இத்திட்டத்திற்கு மாற்றாக துவக்கப்பட்ட அம்ரூத் 2.0 குடிநீர் அபிவிருத்தித் திட்டம் இன்னும் முழுமையடையவில்லை. இதனால்காவிரிக்குடிநீர் திட்டத்தை நம்பியே இந்த ஆண்டு திருப்புத்துாரில் குடிநீர் விநியோகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருநாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் உள்ளது.கோடை துவங்கி வெப்பம்அதிகரித்துள்ளது.இதனால்காவிரிப் படுகையில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து வருகிறது. நீர்வரத்து குறைந்தால் திருப்புத்துாரில் பல நாட்களுக்கு ஒருமுறை என குடிநீர் விநியோகம் குறையும். இதைத் தவிர்க்க காவிரிப்படுகையில் நீர்வரத்து ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். மேட்டூரில் குடிநீருக்காக திருச்சிக்கு காவிரிநீரை ஒரு வாரத்திற்கு திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திருப்புத்துார் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுர மாவட்டத்தில் கோடைகால குடிநீர் விநியோகம் சீராக இருக்கும்.