சிவகங்கையில் ‛டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை; ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கையில் தொடக்க கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தஞ்சாவூர் அருகே மல்லிபட்டினம் அரசு பள்ளி ஆசிரியையை கொலை செய்துள்ளனர். சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்குள் புகுந்த கும்பல் ஆசிரியர்களை மிரட்டியுள்ளனர்.இது போன்ற சம்பவத்தை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் தனபால் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சகாய தைனேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசு பிரபாகரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மனோகரன், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராமராஜன் பேசினர். நிதிக்காப்பாளர் சிங்கராயர் நன்றி கூறினார்.