கானாடுகாத்தான் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் தேவை
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக செட்டிநாடு உள்ளது. நீண்ட அகலமான தெருக்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் செட்டிநாட்டு பங்களாக்கள் பார்ப்போரை வியக்க வைக்கும்.தவிர ஆத்தங்குடி டைல்ஸ், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி உட்பட பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கும் தினமும் ஜெர்மன், பிரான்ஸ் உட்பட வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். மேலும் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு உட்பட பல்வேறு படப்பிடிப்புகளுக்காக ஏராளமானோர் வருகின்றனர்.சுற்றுலா வரும் மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாறவோ உணவருந்தவோ போதிய இட வசதி இல்லை. இருக்கும் ஒரு சில பூங்காக்களும் பராமரிப்பின்றி பாழாகி பயன்பாடின்றி கிடக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே இங்குள்ள நட்சத்திர மற்றும் பாரம்பரிய விடுதிகளில் தங்க முடிகிறது.ஏழை மக்கள் அமர கூட இடவசதி இல்லை. சுற்றுலாத் துறை, பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை என சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில்: செட்டிநாட்டு பகுதி பாரம்பரிய பங்களாக்கள், கோயில்கள் அதிகம் உள்ள பகுதி என அறிந்து வருகிறோம். ஆனால் இங்கு எந்த ஒரு வழி காட்டியோ, அடிப்படை வசதியோ இல்லை. பெரிதாக நினைத்து வரும் பலர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.கானாடுகாத்தான் உட்பட சில இடங்களில் இருக்கும் பூங்காக்களும் பராமரிப்பின்றி கிடக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு அரசு வசதிகளை ஏற்படுத்தி தந்தால் நல்லது என்றனர்.