அரசு பஸ்களில் முதல் உதவி பெட்டி போக்குவரத்து கழகங்களுக்கு உத்தரவு
திருப்புவனம் : தொலை துார அரசு பேருந்துகளில் உத்தரவையடுத்து முதல் உதவி பெட்டி பொருத்தப்பட்டு வருகின்றன.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர்.எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி வியாபார நிமித்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளை நம்பியே சென்று வருகின்றனர். ஒவ்வொரு வாகனத்திலும் முதல் உதவி பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவு உள்ளது. ஆனால் அரசு பேருந்துகளில் உள்ள முதல் உதவி பெட்டி பெரும்பாலும் காலியாகவே இருக்கும், இதனால் விபத்து காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த முதல் உதவியும் செய்ய முடியாமல் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க போக்குவரத்து கழகங்கள் அரசு பேருந்துகளில் முதல் உதவி பெட்டி கட்டாயம் வைக்க வேண்டும், பெட்டிகளில் ரத்தப்போக்கை நிறுத்த பஞ்சு, கட்டுப்போட துணி, தீக்காயங்களுக்கு டியூப் மருந்து, ரத்தப்போக்கை நிறுத்த திரவம் அடங்கியவை இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.மேலும் பஸ்களில் முதல் உதவி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதை குறிப்பிடும் வகையில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.