ஓய்வூதியர் முழு பணப்பலன் கிடைக்கும் வரை போராட்டம் போக்குவரத்து தொழிலாளர் சங்கம்
சிவகங்கை, ஆக.22--அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அனைத்து பணப்பலனும் முழுமையாக கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் புறநகர், டவுன் பஸ்கள் என 20,260 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இத்துறையில் பணிபுரிந்து, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய பென்ஷன் திட்டத்தில் பங்களிப்பு தொகையை செலுத்தி, 2003 ஜூலை முதல் 2025 ஜன., வரை 90,000 பேர் வரை ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்குரிய 25 மாதங்களுக்கான ஓய்வூதிய பணப்பலன் வழங்காமல், அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் இழுத்தடித்து வந்தது. இப்பணப்பலன்களை விடுவிக்க கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுடன், ஓய்வூதியர்களும் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அரசு, முதற்கட்டமாக 10 மாதங்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க ரூ.1,137 கோடியை விடுவித்துள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) காரைக்குடி மண்டல தலைவர் தெய்வீரபாண்டியன் கூறியதாவது: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பென்ஷன் பெறுபவர்களுக்கு இன்னும் 6 மாதமும், பழைய பென்ஷன் திட்ட ஊழியர்களுக்கு இன்னும் 15 மாத பணப்பலன் விடுவிக்க வேண்டும். அவற்றையும் அரசு உடனே விடுவிப்பதாக அறிவிக்கும் வரை, மாநில அளவில் அனைத்து மண்டல அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டம் தொடரும், என்றார்.