சார் பதிவாளர் அலுவலக கட்டடத்திற்காக மானாமதுரையில் மரங்கள் வெட்டி அகற்றம்
மானாமதுரை: மானாமதுரையில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்காக பழமையான மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கட்டடங்கள் சேதமடைந்ததால் புதிய அலுவலகம் கட்ட அரசு நிதி ஒதுக்கியதையடுத்து பழைய கட்டடங்கள் சில வாரங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.நேற்று அப்பகுதியில் இருந்த நாவல், வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று மரங்கள் அகற்றப்பட்டது. இப்பகுதி எப்போதும் இயற்கையான காற்றோட்டமாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை இருந்ததால் பத்திரம் பதிவு செய்ய வருபவர்கள், அண்ணாதுரை சிலை பஸ் ஸ்டாப்பில் பஸ்களுக்காக காத்திருப்பவர்கள் இங்குள்ள மர நிழலில் இளைப்பாறினர். தற்போது புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக மரங்களை வேரோடு அகற்றி வருவதால் வேதனையில் உள்ளனர்.