உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊராட்சியில் பயனில்லாத விளையாட்டு உபகரணம் திட்டம்: முழுமையாக சேராததால் பொருட்கள்..வீணாகிறது

ஊராட்சியில் பயனில்லாத விளையாட்டு உபகரணம் திட்டம்: முழுமையாக சேராததால் பொருட்கள்..வீணாகிறது

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ஊராட்சிகள் தோறும் கிரிக்கெட், கூடைப்பந்து, வாலிபால் உட்பட பல்வேறு விளையாட்டு மற்றும் பயிற்சி உபகரணங்கள் என 33 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஊராட்சியிலும் விளையாட்டு மன்றம் அமைக்கப்பட்டு கிராமங்களில் திறமையான வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 2024ம் ஆண்டு காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 874 ஊராட்சிகளுக்கு ரூ.5.03 கோடி மதிப்பீட்டிலான விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார். கிராமப்புற வீரர்களுக்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் நோக்கமே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. முறையான பராமரிப்பின்றி விளையாட்டு உபகரணங்கள் பல ஊராட்சிகளில் வீணாகி வருகிறது. சில ஊராட்சிகளில் விளையாடுவதற்கு இடம் தேர்வு செய்யப்படாமல் திட்டமே சென்றடையாத நிலை உள்ளது. சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில்: கிராமப்புற மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் இத்திட்டம் முழுமையாக கிராமங்களை சென்றடையவில்லை. பல ஊராட்சிகளில் உபகரணங்கள் முறையாக வழங்கப்படவில்லை. விளையாட்டு மன்றம் அமைக்கப்பட்டு அதற்கு தலைவர் நிர்வாக உறுப்பினர்கள் அமைக்க வேண்டும். ஆனால், மன்றம் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. ஊராட்சி செயலர் மூலம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி அதை முறையாக வாங்கி பராமரிக்க வேண்டும். இப்பணியும் சுழற்சி முறையில் முறையாக நடைபெறவில்லை. மைதானம் உள்ள ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விளையாடுவதற்கு மைதானம் இல்லாத ஊராட்சிகளில் இதுவரை இத்திட்டம் சென்றடையவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமப்புற இளைஞர்களிடம் இத்திட்டம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் கூறுகையில்: விளையாட்டு உபகரணங்கள் ஊராட்சிகளுக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளது. மைதானம் இல்லாத ஊராட்சிகளில் இடம் தேர்வு செய்யும் பணி பெருமளவில் முடிந்து விட்டது. ஊராட்சி செயலர் மூலம், விளையாட்டு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு வீரர்கள் உபகரணங்கள் பயன்படுத்தும் விவரம் குறித்து பதிவேற்றம் செய்ய செயலியும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்றனர். காரைக்குடி, ஆக. 2௯-- சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் முழுமையாக சென்றடையவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ