வேலை உறுதி திட்ட பணி கிராமத்தினர் முற்றுகை
சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியம், ஏரிவயல் ஊராட்சியில் 5 கிராமங்களுக்கு வேலை உறுதி திட்ட பணி வழங்காததை கண்டித்து கிராமத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.காளையார்கோவில் ஒன்றியம், ஏரிவயல் ஊராட்சியின் கீழ் ஏரி வயல், சாக்கூர், கொத்தமங்கலம், அச்சங்குடி, அஞ்சுவயல் உட்பட 8 கிராமங்களில் 1300 பேர் வசிக்கின்றனர். சில மாதங்களாக சாக்கூர் உட்பட சில கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை.தங்களுக்கு வேலை உறுதி திட்ட பணிகள் வழங்க கோரியும், ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்யக்கோரி சாக்கூர் உட்பட 5 கிராமங்களை சேர்ந்த பெண்கள், நேற்று காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பி.டி.ஓ., அலுவலக நுழைவு வாயில் தரை தளத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களிடம் பி.டி.ஓ., (ஊராட்சிகள்) விஜயகுமார், துணை பி.டி.ஓ., முத்துராஜா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.பேச்சு வார்த்தையின் முடிவில், இன்று முதல் வேலை உறுதி திட்ட பணிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.