உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டவராயன்பட்டிக்கு மாற்று ரோடு அமைக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

கண்டவராயன்பட்டிக்கு மாற்று ரோடு அமைக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

கண்டவராயன்பட்டி: திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் குறுகியதாக உள்ள கடைவீதி ரோட்டிற்கு மாற்றாக புதிய ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டவராயன்பட்டியில் கடைவீதி ரோடு முக்கிய ரோடாக உள்ளது. திருப்புத்தூர், பொன்னமராவதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த ரோட்டின் வழியாகவே செல்கிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக தனியார் நன்கொடை மூலம் போடப்பட்ட இந்த ரோட்டிற்கு அருகாமையில் குடியிருப்புக்கள் உள்ளன. இதனால் வாகனங்கள் விலகிச் செல்ல இடமில்லை. இரு பஸ்கள் வந்தால் கடந்து செல்ல முடியாது. மேலும் இதே ரோட்டில் 8க்கும் அதிகமான குறுக்குத் தெரு ரோடுகள் இருபுறமும் செல்கின்றன. இதைத் தவிர்க்க இந்த ரோட்டை உள்ளூர் போக்குவரத்திற்கும், பெரிய வாகனங்கள் செல்ல வசதியாக ஊருக்கு வெளியிலிருந்து திருப்புத்தூர், பொன்னமராவதி ரோடுகளை இணைக்கும் புதிய ரோடு அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன் கூறியதாவது:இந்த ரோட்டில் நெருக்கடியைத் தவிர்க்க திருப்புத்தூர் ரோட்டில் தண்ணீர் பந்தலில் இருந்து பன்னிக்குட்டி கண்மாய் கரை வழியாக மங்கம்மா சாலையில் சந்திக்கும் வரை புதிய ரோடு அமைக்க வேண்டும். பெரிய வாகனங்களும் எளிதாக செல்ல முடியும். நெடுஞ்சாலைத்துறையினர் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இப்புதிய ரோடு அமைவதின் மூலம் திருப்புத்தூர், பொன்னமராவதியிலிருந்து வரும் வாகனங்கள் எளிதாக கண்டவராயன்பட்டியை கடந்து செல்லும் என தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ