உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எச்சரிக்கை: கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம்: வதந்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை

எச்சரிக்கை: கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம்: வதந்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் உள்ள சிறகிழிநாதர் என்ற சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது.இக்கோயில் ஆனித் திருவிழா ஜூன் 30 ல் தொடங்குகிறது.தேரோட்டம் ஜூலை 8 ந்தேதி நடைபெற உள்ளது.இக்கோயில் தேரோட்டம் சுமூகமாக நடைபெறுவது தொடர்பான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் தேவகோட்டையில் சப் கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வத்ஸ் தலைமையில் நடந்தது. இதில் டி.எஸ்.பி.,பார்த்திபன், சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோ, ஹிந்து அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேவகோட்டை போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட உஞ்சனை, தென்னிலை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய நான்கு நாட்டைச் சேர்ந்த அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பாக தேரோட்டத்தை நடத்த வேண்டும், ஜூலை 8ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கும். இதில் நான்கு நாட்டைச் சேர்ந்த அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் வகையில் பாஸ் வழங்கப்படும், வடம் பிடிப்பவர்கள் ஆதார் நகல், மொபைல் எண்ணுடன் ஜூன் 26 ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வடம்பிடிப்பவர், சுவாமி துாக்குபவர்கள், பின்னால் வரும் பார்வையாளர்கள், கட்டை போடுபவர்கள் அனைவருக்கும் டி.எஸ்.பி. மூலம் பாஸ் வழங்கப்படும்.வடம் பிடிப்பவர்கள் அதிகாலை 5:00 மணிக்கே வந்து விட வேண்டும். வடம் பிடிப்பவர்கள் ஜாதி அடையாளங்களை அணிந்து வரக்கூடாது. தேரோட்டம் நடக்கும் போது வெளியூரைச் சேர்ந்த ஜாதி அமைப்பு, தலைவர்களுக்கு அனுமதி இல்லை. பிளக்ஸ், போஸ்டர்களுக்கு அனுமதி இல்லை. தேரோட்டம் தொடர்பாக இணையதளம் மூலமாக ஜாதி ரீதியான பதிவு மூலம் வதந்தி பரப்புவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அனைவரும் ஏற்று கையெழுத்திட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை