உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்ட ஆறு, கண்மாய்களில் நீர் வரத்து: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்ட ஆறு, கண்மாய்களில் நீர் வரத்து: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் ஆறு, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா வழியாக வைகை ஆறு செல்கிறது. வடகிழக்கு பருவமழை, கோடை மழை, வைகை அணையில் நீர் திறப்பு உள்ளிட்ட காலங்களில் கண்மாய்கள், குளங்கள், பள்ளங்கள், வாய்க்கால்களில் தண்ணீர் தேங்குவது வழக்கம், வைகை ஆற்றுப்படுகை, கண்மாய்,குளம் உள்ளிட்டவற்றில் மணல் திருட்டு அதிகளவில் நடந்துள்ளது. மணல் திருட்டு காரணமாக ஏற்பட்ட பள்ளங்களில் மழை காலங்களில் தண்ணீர் நிரம்பி இருப்பது வழக்கம், தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. ஆற்றில் நீர் வரத்து காரணமாக விவசாயிகள்,பொதுப்பணித்துறையுடன் இணைந்து கண்மாய்களுக்கு பாசன தேவைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரமனூர், மாரநாடு, கானூர் , திருப்பாச்சேத்தி உள்ளிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் சென்ற வண்ணம் உள்ளது. கண்மாய், வாய்க்கால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் கீழே சகதியாகவும் மாறி விடும். திருப்புவனம் தாலுகாவில் உள்ள 162 பள்ளிகளில் 17 ஆயிரத்து 248 மாணவர்களும், 15 ஆயிரத்து 130 மாணவிகள் உட்பட 32 ஆயிரத்து 578 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் திருப்புவனம் மேம்பாலம் அருகிலும், லாடனேந்தல் தடுப்பணை அருகிலும் பெரிய பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் நீர் வற்றவே வற்றாது. இதில் பலரும் ஆபத்தை உணராமல் குளிக்க, மீன் பிடிக்க சென்று உயிரிழந்துள்ளனர். பல முறை இந்த பள்ளங்களை மூட வேண்டும் என வலியுறுத்தியும் அது நிறைவேற்றப்படவே இல்லை. நீர்நிலைகளில் சிறுவர்கள் உயிரிழப்பது பெரும்பாலும் விடுமுறை தினங்களில் தான் நடைபெறுகிறது. பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்ற பின் தனியாக இருக்கும் சிறுவர்கள் நண்பர்களுடன் ஆபத்தை உணராமல் குளிக்க சென்று உயிரிழக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நீர்நிலைகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை வைப்பது, தடுப்புகள் ஏற்படுத்துவது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை