சேதமடைந்த தொட்டியால் வீணாகும் குடிநீர்
கீழடி: கீழடி அருகே கொந்தகையில் தொட்டி சேதமடைந்த நிலையில் தினசரி ஏற்றப்படும் குடிநீர் வீணாகி வருகிறது. திருப்புவனத்தைச் சுற்றிலும் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் பொதுமக்கள் குடிநீர் மற்றும் பொது தேவைகளுக்காக தெருக்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அருகிலேயே தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கிராமங்களில் பெரும்பாலும் கண்மாய் மற்றும் குளம் ஆகியவற்றின் அருகே தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான மின்கட்டணத்தை அந்தந்த ஊராட்சி அமைப்புகளே செலுத்த வேண்டும், ஆனால் கடந்த சில வருடங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மின் கட்டணத்தை செலுத்துவதில்லை. ஆனாலும் மின்வாரியம் இணைப்பை துண்டிப்பதில்லை. கிராமங்களில் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப தனியாக ஆட்கள் யாரும் நியமிக்கப்படாததால் திறந்த நிலையில் இருக்கும் ஸ்விட்ச் பாக்சை பயன்படுத்தி அருகில் இருப்பவர்கள் மோட்டார்களை இயக்குகின்றனர். கீழடி அருகே கொந்தகை பஸ் ஸ்டாப் பின்புறம் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் மோட்டார் இயக்கி தொட்டியில் தண்ணீர் நிரப்பினாலும் சில நிமிடங்களிலேயே தண்ணீர் முழுவதும் வெளியேறி விடுகிறது. ஆனாலும் தொட்டி சரி செய்யப்படாமல் உள்ள நிலையில் சேதமடைந்த தொட்டியில் மோட்டாரை இயக்கி தண்ணீரை நிரப்புகின்றனர். இதனால் தேவையின்றி மின்சாரம் விரயமாகி மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது. பலமுறை தண்ணீர் தொட்டியை சரி செய்ய வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் மீண்டும் சேதமடைந்த தொட்டியிலேயே தண்ணீர் நிரப்பப்பட்டு வீணாகி வருகிறது.