நாம் தமிழர் கட்சி வேட்பாளர், கணவர் இறந்ததாக வாக்காளர் பட்டியல்; கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதம்
சிவகங்கை: சிவகங்கை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜா, அவரது கணவர் ரமேஷ் இறந்து விட்டதாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான பட்டியலில் வெளியானதால், நேற்று கலெக்டர் பொற்கொடியை முற்றுகையிட்டு அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜா. இவரது கணவர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ். இவர்கள் சிவகங்கை சாஸ்திரி 5 வது தெருவில் வசிக்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அப்பகுதி ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைத்து விட்டனர். வாக்காளர்கள் உறுதிப்படுத்தும் நோக்கில் நிரந்தரமாக இடம் மாற்றம் செய்தவர்கள், இறந்தவர்கள் அடங்கிய பட்டியலை நகராட்சி சார்பில் பூத் ஏஜன்ட்களுக்கு வழங்கினர். கட்சியின் பூத் ஏஜன்டான ரமேஷ் பட்டியலை ஆய்வு செய்த போது, அவரும் இந்துஜாவும் இறந்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.