ரோட்டில் கொட்டப்பட்ட வெள்ளைப்பூசணி: விலை இல்லாததால் திருப்பாச்சேத்தி விவசாயிகள் கவலை
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி, மாரநாடு, சலுப்பனோடை உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பளவில் வெள்ளைப்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. கோடை காலத்தில் சாகுபடி செய்யப்படும் வெள்ளைப்பூசணி திருநெல்வேலி, கேரளா, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அல்வா செய்யவும், திருஷ்டி காயாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறைந்த அளவு தண்ணீர் தேவை, பராமரிப்பு செலவும் குறைவு, ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்பட்ட பின் உடனடியாக பணம் போன்ற காரணங்களால் விவசாயிகள் வெள்ளைப்பூசணி சாகுபடி செய்கின்றனர்.நடவு செய்த பின் களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், உரம் வைத்தல் உள்ளிட்டவைகள் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நடவு செய்த மூன்று மாதங்களுக்கு பின் அறுவடை தொடங்கும், ஏக்கருக்கு 20 டன் முதல் 30 டன் வரை வெள்ளைப்பூசணி கிடைக்கும், வெள்ளைப்பூசணியை வியாபாரிகள் நேரடியாக வயல்களிலேயே வந்து வாங்கிச் செல்வது உண்டு, அறுவடை காலங்களில் மதுரையில் இருந்து வியாபாரிகள் நேரில் வந்து பூசணியை பார்வையிட்டு வாங்கிச் செல்வார்கள், டன் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கடந்தாண்டு கிடைத்ததால் இந்தாண்டு கூடுதலான பரப்பளவில் விவசாயிகள் வெள்ளைப்பூசணி சாகுபடி செய்திருந்தனர்.ஆனால் பகல் முழுவதும் வெயில், மாலையில் திடீரென மழை என மாறுபட்ட சீதோஷ்ண நிலையில் வெள்ளைப்பூசணியில் புழு தாக்குதல், ஓழுங்கற்ற வடிவத்தில் விளைச்சல் என பாதிப்பு ஏற்பட்டது. ஏக்கருக்கு 25 டன் வரை கிடைத்த இடத்தில் ஐந்து முதல் பத்து டன் வரையே கிடைத்துள்ளது. மேலும் வியாபாரிகளும் கடந்தாண்டு போல இந்தாண்டு வெள்ளைப்பூசணி வாங்க ஆர்வம் காட்டவில்லை. டன் ஒன்றுக்கு இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து 500 வரையே விலை நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.மாரநாடு பூமிநாதன் கூறுகையில்: வெள்ளைப்பூசணியில் லாபம் அதிகம் கிடைத்ததால் இந்தாண்டு அதிகளவு விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் பயிரிட்டோம், பூ, பிஞ்சு விடும்போது சுரட்டை நோய் தாக்குதல், பூசணி பெரிதாகவும் புழு தாக்குதலால் பூசணியில் துளை விழுந்து விட்டது. எனவே வியாபாரிகள் வாங்க மறுத்து விட்டனர் உரிய மருந்து தெளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை, என்றார்.ராக்கு கூறுகையில்: ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும் உரிய விலை கிடைக்கவில்லை. கடும் வெயில் காரணமாக வெள்ளைப்பூசணியில் நோய் தாக்கியது பூசணியின் மேற்புறம் சொரசொரப்பாக இருந்ததால் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். எனவே பூசணியை அறுவடையே செய்யவில்லை. வயலிலேயே கிடந்து வீணாகி வருகிறது, என்றார்.சலுப்பனோடை மச்சக்காளை கூறுகையில்: கடந்தாண்டு ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து ஐந்து ஏக்கரில் வெள்ளைப்பூசணி சாகுபடி செய்தேன், 100 டன் வரை கிடைத்தது. டன் ஒன்றிற்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை சீசனை பொறுத்து விலை கிடைத்தது. எனவே இந்தாண்டும் ஐந்து ஏக்கர் பயிரிட்டேன், 30டன் வரையே கிடைத்தது. போதிய விலை கிடைக்கவில்லை, என்றார்.சலுப்பனோடை பூங்கொடி கூறுகையில்: நகையை அடகு வைத்து வெள்ளைப்பூசணி பயிரிட்டோம், ஏக்கருக்கு 25 டன் வரவேண்டிய இடத்தில் ஐந்து டன் வரையே கிடைத்தது. வயலுக்கு லாரி வராததால் டிராக்டர் வைத்து ரோடு வரை கொண்டு வர டன் ஒன்றுக்கு 800 ரூபாய் வாடகை கொடுத்து வந்தும், வியாபாரிகள் அதில் 70 சதவிகிதத்தை கழித்து விட்டனர். கடந்தாண்டு உடனுக்குடன் பணம் கொடுத்த வியாபாரிகள் இந்தாண்டு வெள்ளைப்பூசணி விற்பனை செய்த பின் பணம் கொடுப்பதாக கூறி விட்டனர். மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.