கீழடியில் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படுமா
கீழடி: கீழடியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கீழடியை சுற்றிலும் பொட்டப்பாளையம், பாட்டம், கரிசல்குளம், கொந்தகை என 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கீழடியில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் காவல்துறை மானிய கோரிக்கையின் போது கீழடியில் இரண்டு கோடியே 83 லட்ச ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்ட குறைந்த பட்டம் 10 சென்டில் இருந்து 20 சென்ட் இடம் தேவை. கீழடியில் அரசு இடம் இல்லாத நிலையில் முதல் கட்டமாக சோதனைச் சாவடி பணிக்காக வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே கட்டப்பட்ட கட்டடத்தில் கடந்த நவம்பர் 15ல் மதுரை ஐ.ஜி., போலீஸ் ஸ்டேஷன் திறந்து வைக்க உள்ளார் என கூறி கட்டடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்பின் போலீஸ் ஸ்டேஷன் திறப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. ஒரு போலீஸ் ஸ்டேஷன் அமைக்க எஸ்.ஐ., தலைமையில் குறைந்த பட்சம் 10 போலீசார் வேண்டும், திருப்புவனத்தில் 130 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் 52 போலீசாரே பணியில் உள்ளனர். எனவே கூடுதலாக போலீசார் நியமித்தால் தான் கீழடியிலும் போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியும் என்பதால் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.