திருப்புவனத்தில் இருமடங்கு மழை எதிர்பார்த்த விளைச்சலை தருமா
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட இருமடங்கு பெய்துள்ள நிலையில் விளைச்சல் முழு அளவில் கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கத்துடன் உள்ளனர்.திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானுார்,பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி நெல் விவசாயம் நடைபெறுகிறது. செப்டம்பர் கடைசியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும். இதனை கணக்கிட்டு திருப்புவனம் பகுதி விவசாயிகள் செப்டம்பரில் நாற்றங்கால் தயார் செய்து அக்டோபரில் நடவு செய்து விடுவார்கள், பெரும்பாலும் 100 முதல் 140 நாள் பயிர்களையே சாகுபடி செய்வது வழக்கம்.இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்ததால் தற்போது தான் நடவு பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவ மழை வழக்கமாக 422.7 மி.மீ., பெய்யும், இந்தாண்டு 670 மி.மீ., பெய்துள்ளது. 2023ல் 571 மி.மீ., 2022ல் 665 மி.மீ., மழை பெய்துள்ளது.2022, 2023ல் வடகிழக்கு பருவமழை வழக்கமான நாட்களில் தொடங்கியதால் விளைச்சல் முழு அளவில் ஏக்கருக்கு 30 முதல் 40 மூடை வரை கிடைத்தன. இந்தாண்டு தாமதமாக பெய்ததால் முழு அளவில் விளைச்சல் கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர்.இந்தாண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழை குறிப்பிட்ட அளவில் பெய்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பெய்யும் கோடை மழை இந்தாண்டு 116.2 மி.மீ., 2023ல் 201.6 மி.மீ., பெய்துள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக 301 மி.மீ., பெய்யும், இந்தாண்டு 505 மி.மீ., 2023ல் 622.6 மி.மீ,, 2022ல் 1071 மி.மீ., பெய்துள்ளது. வழக்கமான அளவை விட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை, கோடை மழை பெய்துள்ள நிலையில் தாமதமாக பெய்ததால் விவசாயிகள் தவிப்புடன் உள்ளனர்.