சிறிய விபத்தில் கூட நொறுங்கும் ஹெல்மெட் தரத்தை ஆய்வு செய்வார்களா அதிகாரிகள்
மானாமதுரை: மானாமதுரையில் ஏற்பட்ட விபத்தில் டூவீலரில் வந்த வாலிபர் அணிந்திருந்த ஹெல்மெட் நொறுங்கிய சம்பவத்தால் ஹெல்மெட் அணிபவர்களிடையே அதன் தரம் குறித்த கேள்வி எழுந் துள்ளது. தமிழகத்தில் டூவீலர்கள் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தற்போது இளைஞர்கள் அதிவேகமாக செல்லும் டூவீலர்களை வாங்கி வேகமாக செல்வதால் அதற்கேற்ப விபத்தும் அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்கி பல இளைஞர்கள் தலையில் பலத்த காயமடைந்து பலியாகி வருகின்றனர் . அரசும், கோர்ட்டும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ட்ராபிக் போலீசாரும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். ெஹல்மெட் தேவை அதிகம் இருப்பதால் போலியாக ஐ.எஸ்.ஐ., முத்திரையோடு மிகக் குறைந்த விலையில் ரோட்டோரங்களில் கூட ஹெல்மெட்டை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் புதிதாக டூ வீலர் வாங்கும்போது இலவசமாக ஹெல்மெட் ஒன்றையும் கொடுத்துள்ளனர்.அதனை அணிந்து கொண்டு மானாமதுரைக்கு வந்த போது சரக்கு வாகனத்தில் மோதி அவர் அணிந்திருந்த ஹெல்மெட் நொறுங்கியதில் அந்த வாலிபருக்கு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வாலிபர் ஐ. எஸ். ஐ., முத்திரை பதித்த ஹெல்மெட் அணிந்திருந்தும் அது விபத்தில் நொறுங்கி அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். வாகன ஓட்டிகள் கூறியதாவது:விபத்தில் உயிரிழப்பு, காயத்தை தவிர்க்க தான் ஹெல்மெட் அணிகிறோம். ஐ.எஸ்.ஐ., முத்திரை பதித்த ஹெல்மெட் தரமின்றி நொறுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட் தரத்தை ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியமாக உள்ளது. ஹெல்மெட் தரமாக தயாரிக்கப்படுகிறதா, உரிய தரச்சான்று விதிகள் பின்பற்றப்படுகிறதா என அரசு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தரமில்லாத ஹெல்மெட் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.