உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தீயணைப்பு நிலைய கோரிக்கை நிறைவேறுமா

தீயணைப்பு நிலைய கோரிக்கை நிறைவேறுமா

திருப்புவனம்: திருப்புவனத்தில் தொடரும் தீ விபத்துகளால் இழப்பு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.2013ல் திருப்புவனம் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. தாலுகா தலைநகருக்கு வேண்டிய டி.எஸ்.பி., அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை 11 வருடங்கள் கடந்தும் இன்று வரை வரவில்லை. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. கோடை காலங்களில் தீவிபத்து.சாலை விபத்து, கிணற்றில் விழுந்து தவிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் மானாமதுரையில் இருந்து தான் தீயணைப்பு வீரர்கள், மீட்பு வாகனம் வர வேண்டியுள்ளது. திருப்புவனம் கடைசியில் பொட்டப்பாளையம் உள்ளது. மானாமதுரையில் இருந்து வாகனம் திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மதுரை விரகனூர் ரிங்ரோடு என 60 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டும்.திருப்புவனம் தபால் அலுவலகத்தில் நடந்த தீ விபத்தில் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் தீ அணைக்கப்பட்ட பின்பு தான் வந்தனர். இதுபோன்று பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு வீரர்கள் வர தாமதம் ஆவதால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் வைகை ஆற்றிலும் நீர்வரத்து தொடங்கியுள்ளது. கண்மாய், குளங்களிலும் தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் விடுமுறை நாட்களில் பலரும் மீன்பிடிக்க சென்று விபத்தில் சிக்குவது வழக்கம், தீயணைப்பு நிலையம் இல்லாததால் இழப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில் தீயணைப்பு நிலையம் உள்ளது. திருப்புவனம், கல்லல், காளையார்கோயில் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசுக்கு அறிக்கை அனுப்பட்டுள்ள நிலையில் கல்லல் மற்றும் புதுவயலில் தீயணைப்பு நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. மடப்புரம் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. எனவே திருப்புவனத்தில் விரைந்து தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ