உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார், சிங்கம்புணரி மக்கள் அலைச்சல் தவிர்க்கப்படுமா; திருப்புத்துாரில் சப் கோர்ட் அமையுமா

திருப்புத்துார், சிங்கம்புணரி மக்கள் அலைச்சல் தவிர்க்கப்படுமா; திருப்புத்துாரில் சப் கோர்ட் அமையுமா

திருப்புத்துாரில் தற்போது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகிய கோர்ட்கள் இயங்கி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு அதிகமான சிவில் வழக்குகள் இருப்பதை வைத்து சப் கோர்ட் அமைக்க கோரப்பட்டது. இதனடிப்படையில் இரு கோர்ட்கள் இயங்கும் வகையில் கட்டட வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சப்கோர்ட் துவக்கப்படவில்லை. பதிலாக 6 ஆண்டுகளுக்கு முன்பாக சிவில் வழக்குகள் அதிகமாக இருந்ததை வைத்து, சிங்கம்புணரி தாலுகா பகுதி வழக்குகளுக்காக சிங்கம்புணரியில் புதிய முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை திருப்புத்துார் மற்றும் சிங்கம்புணரி பகுதியினர் தற்போதைய சிவில் வழக்குகளில் மேல்முறையீட்டிற்கும், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான சிவில் வழக்குகளுக்கும் சிவகங்கை சப்கோர்ட்டையே அணுக வேண்டியுள்ளது. இதனால் திருப்புத்துார் சார்பு நீதிமன்றத்தைத் துவக்க இப்பகுதியினர் தொடர்ந்து கோரி வருகின்றனர். அதற்கான கட்டட,இட வசதி தற்போதைய திருப்புத்துார் கோர்ட் வளாகத்தில் உள்ளது. புதிய சார்பு நீதிமன்றம் துவக்கப்படுவதால் சிவில் வழக்கு மேல்முறையீடு மட்டுமின்றி, மோட்டார் வாகன காப்பீடு வழக்கு, குடும்பநல வழக்கு, பாதுகாவலர் மனு உள்ளிட்ட பலவற்றிற்கு திருப்புத்துார்,சிங்கம்புணரி பகுதியினர் சிவகங்கைக்கு அலைய வேண்டியிருக்காது. குறிப்பாக எஸ்.புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் 70 கி.மீக்கும் அதிகமாக அலைவது தவிர்க்கப்படும் நிலை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி