காவிரி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த இளைஞர்கள்
இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 55 ஊராட்சிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் இளையான்குடி பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் துவங்கி 15 ஆண்டுகள் ஆன நிலையில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மற்றும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள குடிநீரேற்று நிலையங்கள் போதிய பராமரிப்பு இன்றி குழாய்கள் அடிக்கடி உடைவதாலும், மோட்டார்கள் பழுதடைவதாலும் இளையான்குடி பகுதியில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூட காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் இளையான்குடி அருகே இந்திரா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி மிகவும் சுத்தமில்லாமல் அசுத்தமாகவும், குடிநீரோடு கழிவுகளும் சேர்ந்து வருவதால் அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது வரை குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குடிநீர் தொட்டியில் பிளீச்சிங் பவுடர் மூலம் குளோரினேஷன் செய்தனர்.