பூ வியாபாரி வீடு புகுந்து சரமாரியாக வெட்டி கொலை
ஊத்துமலை; தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஊத்துமலையை சேர்ந்தவர் வடிவேல், 52; ஊத்துமலை பஸ் நிறுத்தம் அருகே பூக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தவமாரியம்மாள். இரு மகள், ஒரு மகன் உள்ளனர். பூக்கடை தொடர்பான இடத்தகராறில், வடிவேலுக்கும், அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. மேலும், வடிவேலுவுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக சிலருடன் பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பூக்கடைக்கு வந்த சிலர், வடிவேலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், வீட்டிற்கு வந்த வடிவேல், உறங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். சுதாரித்து எழுந்து தெருவில் ஓடிய வடிவேலுவை விடாமல் துரத்திய அந்த கும்பல், விரட்டி வெட்டியதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஊத்துமலை போலீசார் கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.