| ADDED : ஜூன் 21, 2024 12:41 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில், கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டில், உயிரின கால்நடை பெருக்கு பண்ணை உள்ளது. இப்பண்ணையில் உயர் ரக 215 கால்நடைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த கால்நடைகளை பராமரிக்க தினக்கூலி பணியாளர்களாக 81 பேர் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் இரவு, சேதுராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தற்காலிக பணியாளர் கோவிந்தராஜ், 45, என்பவர், கால்நடைகளை பராமரித்துக் கொண்டிருந்தார்.அப்போது, மாடு ஒன்று அவரை நெஞ்சில் முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லும் வழியில் இறந்தார். இதையடுத்து, நேற்று காலை உயரின கால்நடைப் பெருக்கு பண்ணை முன்பு தினக்கூலி பணியாளர்கள் அனைவரும், 'கோவிந்தராஜ் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என கோரி, பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, பணியாளர்களிடம் தஞ்சாவூர் மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் கார்த்திகேயன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் ராஜியகொடி பேச்சு நடத்தினர். பணியாளர்களின் கோரிக்கையை உயரதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து, பகல் 12:00 மணிக்கு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.