தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பாரத் நகரை சேர்ந்தவர் பரஞ்சோதி. விவசாயியான இவர் பல்வேறு நெல் ரகங்களை சாகுபடி செய்து, வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்கிறார்.இவர், தன் பெயரிலும், மனைவி தேவி, மாமியார் சூர்யகுமாரி பெயரில், கும்பகோணம் ஐ.டி.பி.ஐ., வங்கியில் நெல் மூட்டைகள் அடமானம் வைத்து, 1.42 கோடி ரூபாய் கடன் பெற்றார்.சில மாதங்களில், கடனை வட்டியுடன் திருப்பி செலுத்திய பரஞ்சோதி, அடகு வைத்த நெல் மூட்டைகளை வங்கியில் திரும்ப கேட்டார்.வங்கி நிர்வாகத்தினர் நெல் மூட்டைகளை திரும்ப வழங்கி விட்டதாகவும், கிடங்கில் இல்லை எனவும் தெரிவித்தனர்.அதிர்ச்சியடைந்த பரஞ்சோதி, தன் 9,175 நெல் மூட்டைகளை வங்கி நிர்வாகம் முறைகேடு செய்து விட்டதாக கூறி, மதுரை உயர் நீதிமன்றத்தில் 2019ல் வழக்கு தொடர்ந்தார்.விசாரித்த நீதிபதிகள், தஞ்சாவூர் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றினார். விசாரணையில், வங்கி நிர்வாகம் மற்றும் வங்கி நிர்வாகத்தின் கிடங்கு அதிகாரிகள் போலியான ஆவணங்களை தயார் செய்து, நெல்லை விவசாயி பரஞ்சோதிக்கு வழங்காமல் ஏமாற்றியது உறுதியானது.நீதிபதிகள், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, வங்கிக்கு கடன் தொகையை செலுத்திய நாளில் இருந்து 12 சதவீத வட்டியுடன், ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்க உத்தரவிட்டனர்.