தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள இந்திரன் சன்னிதியை திறக்க வழக்கு
மதுரை:தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்திரன் சன்னிதியை திறக்க தாக்கலான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சின்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:தஞ்சாவூர் பெருவுடையார் கோவில், மன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இங்கு, கிழக்கு கோபுரம் நுழைவாயில் உள்பக்கத்தில், மருதநில அரசன் இந்திரனுக்கு சன்னிதி வைத்து, ஆராதனை செய்தார் ராஜராஜசோழன். மக்களும் வழிபட்டனர்.இந்திரன் சன்னிதி, 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு சேதமடைந்து உள்ளது. ஆராதனை நடைபெறவில்லை. சன்னிதியை திறந்து காலை, மாலையில் பூஜை, வழிபாடு நடத்தக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.கோவில் தரப்பில், 'எட்டுத்திசை கடவுள்களில், நான்கு சிலைகள் சேதமடைந்துள்ளன. மற்ற நான்கு சிலைகள் இல்லை. இதில், இந்திரன் சிலையும் அடக்கம். 'எட்டு சிலைகளையும் நிறுவ அனுமதி கோரி, மத்திய தொல்லியல் துறைக்கு தமிழக அறநிலையத்துறை, 2008ல் கடிதம் அனுப்பியது; அனுமதி வழங்கவில்லை' என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, தமிழக தலைமைச் செயலர், அறநிலையத்துறை முதன்மை செயலர், தொல்லியல் துறை கமிஷனர், மத்திய தொல்லியல் துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அக்., 21க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.