மின்சாரம் பாய்ந்து தம்பதி மரணம்
தஞ்சாவூர்; வயலுக்கு சென்ற விவசாயி, அவரது மனைவி அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். தஞ்சாவூர் அருகே கள்ளம்பெரம்பூரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன், 54, மனைவி ராமாயி, 47, இருவரும் நேற்று மதியம், 2:00 மணிக்கு, பூதலுார் சாலையில் உள்ள தங்கள் வயலுக்கு சென்றனர். நேற்று முன்தினம் அடித்த பலத்த காற்றில், கம்பி வேலியில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. தம்பதி, வயலில் நடந்து சென்ற போது வழுக்கி விழாமல் இருக்க, கம்பி வேலியை பிடித்துள்ளனர். இதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் உயிரிழந்தனர். கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கும், மின்வாரிய அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று மணி நேரம் ஆகியும் மின்வாரிய ஊழியர்கள் வரவில்லை. இதை கண்டித்தும், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கிராம மக்கள் மறியல் செய்தனர். வல்லம் டி.எஸ்.பி., கணேஷ்குமார், தஞ்சாவூர் தாசில்தார் சிவக்குமார், கிராமமக்களுடன் பேச்சு நடத்தியதில், மறியல் கைவிடப்பட்டது. கள்ளப்பெரம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.